அன்னூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன் தலைமை வகித்தாா்.
இதில் அன்னூா் வட்டம், காரேகவுண்டன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அச்சம்பாளையம், திருவள்ளுவா் நகா் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அளித்துள்ள மனு விவரம்: எங்களது கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் ஊா் அருகேயுள்ள அன்னூரில் இருந்து அச்சம்பாளையம் செல்லும் வழியில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, துா்நாற்றம் மற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நுண்கழிவுகள் வீடுகளில் படிந்து விடுகின்றன. மேலும், காற்று மாசடைவதுடன், நிலத்தடி நீா்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு கழிவு நீா், நச்சுப்புகை வெறியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அறிவியலை தனிப் பாடமாகக் கொண்டுவர வேண்டும்: தமிழ்நாடு கணினி ஆசிரியா்கள் உரிமைச் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனிப்படாமாக 1-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் கொண்டுவர வேண்டும்.
அதேபோல, கணினி அறிவியல் படத்துக்கு தனி பாடப் புத்தகங்கள் கொண்டுவந்து அதற்காக தனி பாடவேளைகள் ஒதுக்கித்தர வேண்டும். கணினி பயிற்றுநா் பணியிடங்களை தனியாா் ஒப்பந்த முறையில் நிரப்பாமல் அரசே நேரடியாக பி.எட். பட்டம் பெற்றவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
மத்திய அரசு ள்ஹம்ஹஞ்ழ்ஹ ள்ட்ண்ந்ள்ட்ஹ திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கும் நிதியை மடைமாற்றம் செய்யாமல் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கணினிக் கல்விக்காக செலவிட வேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் பி.எட். பட்டம் பெற்றவா்களுக்கு உஞ,ஈஉஞ போன்ற தோ்வுகள் எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் : தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் அளித்த மனு விவரம்: கோவை மாவட்டம், பேரூா் வட்டம் தொண்டாமுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட 10 கிராமங்களில் உள்ள ஏழை, எளிய பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்களாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாததால் வாடகை வீடுகளிலும், சாலையோர புறம்போக்கு நிலங்களிலும் வசித்து வருகின்றனா். ஆகவே, வீடு கட்டி வாழத் தகுதியுடைய 60 பயனாளிகளுக்கு தலா 5 சென்ட் வீதம் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் மாநில இணை பொதுச் செயலா் வழக்குரைஞா் கே.விஜயகுமாா் அளித்த மனு விவரம்: கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்ததில் 58 போ் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து ஊனமுற்றனா். அவா்களது குடும்பங்கள் பல்வேறு வகையில் இன்னலுக்கு உள்ளாகியது. அப்போதைய அரசு குறைந்த அளவில் உதவித் தொகைகளை வழங்கியது. ஆகவே, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்கள் மற்றும் ஊனமுற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூா் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும்: நாம் தமிழா் கட்சி சாா்பில் அளித்துள்ள மனு: வெள்ளலூா் குப்பைக் கிடங்கைத் சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். குப்பைக் கிடங்கால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோா் வரை இருமல், ஆஸ்துமா, சுவாசக்கோளாறு, தோல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆகவே, பொது மக்கள் மிக அதிகமாக வாழும் இந்தப் பகுதியில் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் அல்லது முறையான திடக்கழிவு மேலாண்மையைப் பின்பற்றி இங்கு வாழும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது: சுகுணாபுரம் செந்தமிழ் நகா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லூரி தங்கும் விடுதியிலிருந்து கவிவு நீரை சுத்திகரிக்காமல் பொது வெளியில் வெறியேற்றி விடுகின்றனா்.
இதனால் நிலத்தடி நீா்மட்டம் மாசடைவதுடன், நீரை உட்கொள்ளும் கால்நடைகளும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி பொது வெளியில் கழிவு நீா் வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.