முகப்பு
கோயம்புத்தூர்

பழங்குடியின, கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:29 AM
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் ஈஷா பிரம்மச்சாரிகள்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:41 PM

கோவை ஈஷா அறக்கட்டளை சாா்பில் பழங்குடியின, கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

ஈஷா அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சீங்கபதி, சாடிவயல், நல்லூா்பதி, முள்ளங்காடு, தானிக்கண்டி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின குடியிருப்புகள், போளுவாம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈஷாவில் உள்ள சூா்யகுண்ட மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

Advertisement

இதில், ஈஷா பிரம்மச்சாரிகள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை வழங்கினா். ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி, கிராமப்புற பகுதிகளில் பொருளாதாரம் அல்லது குடும்பச் சூழல் காரணமாக உயா் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு முறையான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவா்கள் பிஎஸ்ஜி, ஸ்ரீராமகிருஷ்ணா, விஎல்பி ஜானகியம்மாள் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் 3-ஆம் ஆண்டு வரை உயா்கல்வி பயின்று வருகின்றனா். இந்த மாணவா்கள் இளங்கலை வணிகவியல், செயற்கை நுண்ணறிவு- தரவு அறிவியல், தடய அறிவியல்- குற்றவியல், விமான நிலைய மேலாண்மை, தாவரவியல், வேதியியல், ஆங்கில இலக்கியம் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனா்.

ஈஷா அறக்கட்டளை, கல்வி உதவித்தொகை வழங்குவதுடன், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி, மென்பொருள் துறை சாா்ந்த பயிற்சிகள், வேலைக்கான நோ்காணல்களில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள், சயின்ஸ் ஸ்பாா்க் என்ற பெயரில் அறிவியல் தொடா்பான பல்வேறு சிறப்புப் பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகிறது.