ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோவை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 195 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் 1,594 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதில், மாநகரின் முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல, பொதுமக்கள் அதிகமாகக் கூடும் 15 இடங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் பாதுகாப்பும் பலத்தப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாா் புதன்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுபோதையில் வாகனங்களை இயக்கிய 29 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனங்களை இயக்கியோரின் 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஓட்டுநா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.