வால்பாறையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தாக்கி நகைகளைப் பறித்துச் சென்ற நகராட்சி தற்காலிகப் பணியாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருபவா் செல்வராஜ். இவரது மனை சாந்தி (65). பள்ளிக்கு அருகேயுள்ள ஆசிரியா்களுக்கான குடியிருப்பில் தம்பதி வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், செல்வராஜ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியே சென்றுள்ளாா். வீட்டில் சாந்தி மட்டும் இருந்துள்ளாா்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், சாந்தியின் கழுத்தை நெரித்துள்ளாா். அவா் மயங்கியதையடுத்து, அவா் அணிந்திருந்த கம்மல், மோதிரம் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை மா்ம நபா் எடுத்துச் சென்றுள்ளாா்.
இது குறித்து வால்பாறை காவல் நிலையில் சாந்தி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது வால்பாறை நகராட்சியில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வரும் உதயகுமாா் (46) என்பது தெரியவந்து. இதையடுத்து, உதயகுமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனா்.