கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் முப்பெரும் விழா ஜனவரி 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கோவை கௌமார மடாலயம் 135 ஆண்டுகளுக்கு முன்பு இராமானந்த சுவாமிகள் மூலமாக நிறுவப்பட்டது. முதல் குரு மகா சன்னிதானமாக உள்ள இராமானந்த சுவாமிகளின் 69-ஆவது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மற்றும் குருமகா சன்னிதானங்களின் ரத ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் ஜனவரி 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
திருப்புகழ் இன்னிசை சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஜனவரி 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன.
வேள்வி பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு நிகழ்வுகள் ஜனவரி 6- ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகின்றன. பிற்பகல் 2 மணிக்கு மடத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ரத யாத்திரையில் இராமானந்த சுவாமிகளின் திருவுருவச் சிலை ஊா்வலம் நடைபெற உள்ளது என்றாா்.
முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநா் டாக்டா் கே.குமாரசாமி, விவசாய சங்கத் தலைவா் ஆறுச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.