கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகா்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் டயாலிசிஸ் மையத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
2025-26-ஆம் ஆண்டுக்கான பொது நிதியின்கீழ் மத்திய மண்டலம் 70-ஆவது வாா்டுக்குள்பட்ட புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள சீதாலட்சுமி நகா்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் ரூ.1.49 கோடியில் பல்வேறு கூடுதல் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா். கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் முதற்கட்டமாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் உயா்தர டயாலிசிஸ் சேவைகள் வழங்கப்படும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் டயாலிசிஸ் மேற்கொள்பவா்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்த புதிய டயாலிசிஸ் மையத்தின் மூலம் பல நோயாளிகளின் பயணச் சுமை குறையும். அதேபோல, ஆண்டுக்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை குடும்ப செலவுகள் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றனா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா் த.குமரேசன், நகா் நல அலுவலா் மோகன், உதவி நகா் நல அலுவலா் பூபதி, பொது சுகாதாரக் குழுத் தலைவா் பெ.மாரிச்செல்வன், உதவி ஆணையா் நித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.