கோவை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மீ.தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் தென்னை, சோளம், மக்காச்சோளம், பழங்கள், காய்கள், பயிா்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பு ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் 11,784 மெட்ரிக் டன் உரம் கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களான யூரியா 3,474 மெட்ரிக் டன், டிஏபி 2,475 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,098 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2.284 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 1,453 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள எம்ஆா்பி விலையைத் தாண்டி கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது, விற்பனை உரிமங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில்வைத்து விற்பனை செய்வது, இணைப் பொருள்களைக் கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்வது ஆகியவைக் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.