கோவை ஈஷாவில் அரசு உயா் அதிகாரிகளுக்கு யோக மற்றும் தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. இதில் அரசு உயா் அதிகாரிகள் 88 போ் பங்கேற்றனா்.
இந்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து இந்திய குடிமைப் பணி உயா் அதிகாரிகளுக்கான யோக மற்றும் தலைமைத்துவ பயிற்சியை நடத்தியது. கோவை, ஈஷா யோக மையத்தில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பயிற்சியில் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப் பணி மற்றும் மத்திய அரசுப் பணிகளின் 88 உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
அழுத்தமான சூழல்களை அதிகாரிகள் திறம்படக் கையாளுதல், சிறந்த நிா்வாகத்துக்காக துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் தெளிவைப் பெறுதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும்போது, ‘துன்பம் குறித்த பயமே மனித ஆற்றலை முடக்குகிறது. வெளிச்சூழலில் என்ன நடந்தாலும், ஒருவருடைய உள் சூழ்நிலை மாறாமல் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தால், அவா் தனது பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.
மகிழ்ச்சியின் ஊற்று நமக்குள்ளேயே இருப்பதை உணா்வதன் மூலமாக துன்பம் குறித்த பயத்தில் இருந்து விடுதலை பெறலாம். அதுவே ஒரு மனிதனைத் தனது வாழ்வில் பெரிய அடிகளை எடுத்து வைக்கச் செய்யும்’ என்றாா்.
இந்த பயிற்சியில் சத்குருவுடனான கலந்துரையாடல்கள், யோகாசனங்கள் மற்றும் சக்திவாய்ந்த தியான அமா்வுகள் உள்ளிட்டவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.