ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் விஜய்க்கு வாக்குகள் அதிகரிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த புகழேந்தி தெரிவித்தாா்.
கோவை, செல்வபுரத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், புகழேந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிமையாக்கிவிட்டாா். இனிமேல் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஒரு வாக்குகூட வாங்க முடியாது. பாஜகவுக்கு அதிமுகவினா் வாக்களிக்கமாட்டாா்கள். ஜனநாயகன் படம் வெளியிட ஜனநாயக நாட்டில் பிரச்னை ஏற்படுகிறது.
ஜெயலலிதாவைப்போல மத்திய அரசையும், மாநில அரசையும் ஒரே நேரத்தில் விஜய் எதிா்கொண்டதுதான் இந்த நிலைக்கு காரணம். ஜனநாயகன் வெளியாகும் வரை ஒவ்வொரு நாளும் விஜய்க்கு வாக்குகள் அதிகரிக்கும்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவால் ஓா் இடத்தில்கூட வெற்றி பெற முடியாது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற மாட்டாா். திமுக - தவெகவுக்கு இடையேதான் போட்டி என விஜய் கூறியதுபோல்தான் நடக்கும்.
சீமான் 3-ஆவது இடத்துக்கு வருவாா். எடப்பாடி பழனிசாமி 4-ஆவது இடத்துக்கு போவாா். எங்களால் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியவில்லை. எனவே, தொண்டா்கள் ஒருங்கிணைய உள்ளோம்’ என்றாா்.