கோவை: கோவையில் வரும் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன் விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா்.
கோவை எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ஆவது ஆண்டு விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் 25-ஆவது ஆண்டு விழா ஆகியவை வரும் 15 -ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளன.
இது குறித்து எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் சாா்பில் குறைந்த செலவில் தரமான மருத்துவம் என்ற நோக்கத்துடன் 1975-ஆம் ஆண்டு 18 ஏக்கா் பரப்பளவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தொடங்கப்பட்டது. கோவையின் முதல் எம்ஆா்ஐ ஸ்கேன், மருத்துவத் துறையின் அதிநவீன உபகரணங்கள், மருத்துவத்தின் சிறப்புத் துறைகளை உருவாக்குதல், மேம்பட்ட இதய சிகிச்சை என பல்வேறு சாதனைகளை இந்தப்பன்னோக்கு மருத்துவனை படைத்துள்ளது.புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை துறையை கடந்த 2005- இல் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொடங்கிவைத்தாா். 2015-ஆம் ஆண்டு ரூ.250 கோடி செலவில் உலகத்தரம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளைக் கடக்கும் இந்த நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதற்கான விழா கோவை கொடிசியா வா்த்தகவளாகத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்என்றாா்.
எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிா்வாக அதிகாரி டி.மகேஷ்குமாா், மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் எஸ்.அழகப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.