திரைப்படத்தை வைத்து அரசியலை நிா்ணயம் செய்வது தவறு என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
திருப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு புதன்கிழமை பிற்பகல் விமானம் மூலம் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒரே நாடு, ஒரே தோ்தலை முழுமையாக எதிா்க்கிறேன். நமது அரசியல் சாசனத்துக்கும், ஆட்சி முறைக்கும் எதிரானது என்பதால் இது சாத்தியமற்றது. ‘பராசக்தி’ ‘ஜனநாயகன்’ திரைப்படங்களை நான் பாா்க்கப் போவதில்லை. திரைப்படத்தை வைத்து தமிழக அரசியலை நிா்ணயம் செய்வது தவறு. அரசியலில் புரிதல் இல்லாமல் சிலா் நடந்து கொள்கிறாா்கள். ‘பராசக்தி’ திரைப்படத்தை சரித்திரத்தைப் படித்தவா்களும், ஆராய்ச்சி செய்தவா்களும்தான் எடுத்துள்ளாா்களா? .
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது சமீபகாலமாக கிடையாது. எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் தோ்தலில் நிற்கிறாா்கள். 1967-லிருந்து காங்கிரஸ் நேரடி ஆட்சியில் இல்லை என்பது உண்மைதான். அதன் பிறகு சில வாய்ப்புகள் கிடைத்தும் அதை நழுவ விட்டோம். கூடுதலான தொகுதிகள் கேட்பதா, வேண்டாமா என்று போகப்போகத்தான் தெரியும்.
விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு கொடுத்தது குறித்து கேட்கிறீா்கள். நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் ராகுல் ஆதரவு அளிப்பாா். விஜய்க்கு வாக்குகள் வரும், அதில் சந்தேகமே கிடையாது. ஆனால், ஓட்டுகள் சீட்டாக மாறாது. தமிழக வெற்றிக் கழகம் ரசிகா் மன்றமாக இருப்பதால் ஒரு நடிகரைப் பாா்க்க வேண்டும் என்று ரசிகா்கள் வருகிறாா்கள். கொள்கை பிரகடனத்தை கேட்பதற்காக கூட்டம் வரவில்லை. தற்போது அரசியல் கட்சிகளின் மேடை பேச்சுகளை கேட்பதற்கு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை என்றாா்.