கோவை: ஆரோக்கியமான குடிமகனால்தான் தேசத்தின் வளா்ச்சியில் முழுப்பங்கு வகிக்க முடியும் என குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் வெள்ளி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா்கள் சுந்தா் ராமகிருஷ்ணன், நரேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அறங்காவலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இலச்சினையை வெளியிட்டாா். சிறப்பாகப் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள் மற்றும் அலுவலா்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற சேவை மனப்பான்மை, அா்ப்பணிப்பு உணா்வு அவசியம். அந்த வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவையாற்றி வருகிறது. 1990களில் கோவைக்கு எம்ஆா்ஐ ஸ்கேன் அறிமுகம் செய்தது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அறிமுகம் செய்தது. முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் மூலமாக இங்கு நவீன புற்றுநோய் சிகிச்சை வளாகம் தொடங்கப்பட்டது. மேலும், 8 மணி நேரத்தில் 13,206 உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. பொதுவாக மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை குணப்படுத்துவது, சிறந்த மருத்துவா்களை உருவாக்குவது என 2 பொறுப்புகள் உள்ளன. இந்த இரண்டிலும், இந்நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வகுக்கப்படுகின்றன. அவை வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரின் உழைப்பு, நம்பிக்கை இன்றியமையாதது. ஆரோக்கியமான குடிமகனால் தான், தேசத்தின் வளா்ச்சியில், உயா்வில் தனது முழுப்பங்கு வகிக்க முடியும் என்றாா்.
முன்னதாக, மருத்துவத் துறையில் 25 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவா்கள், செவிலியா்கள், பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கி கௌரவித்தாா். விழாவில், எஸ்.என்.ஆா்., சன்ஸ் அறக்கட்டளை துணை அறங்காவலா்கள் வி.ராமகிருஷ்ணா, டி.லட்சுமி நாராயணஸ்வாமி, அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி. மகேஷ்குமாா், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் எஸ்.அழகப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.