கோவை: பொங்கல் விழாவையொட்டி, கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கோவை ‘அரவணைக்கும் அன்பு’ இல்லத்தில் மத நல்லிணக்க மனிதநேய சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கெளரிசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமூக சேவகி திவ்யா சக்திவேல் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்தாா். தொழிலதிபா் தேவநேசன் குழந்தைகள், முதியவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். இதில், உறியடித்தல், கயிறு இழுத்தல், ஆப்பிள் சாப்பிடுதல், தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு சமூக சேவகா்கள் கண்ணன், ஐசக் மதன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். இந்த விழாவில், சமூகசேவகா்கள் சக்திவேல், மணிவண்ணன், ஷகிலா பானு மற்றும் காப்பக முதியோா்கள், குழந்தைகள் கலந்து கொண்டனா்.