கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், வடசித்தூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்றாா்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், வடசித்தூா் ஊராட்சி சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.
இதில், கைப்பந்து, கோலப்போட்டி, இசை நாற்காலி , கயிறு இழுத்தல், வள்ளி கும்மி ஆட்டம், பொங்கல் பானையை சுற்றி கும்மி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா். மேலும், மாட்டு வண்டியை ஓட்டியும், வள்ளிக்கும்மி நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்றாா்.
முன்னதாக, சமூகநலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பள்ளி மாணவா்கள் கழிவுகளை சேகரித்து தயாரிக்கப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவா் பாா்வையிட்டாா்.
இந்த விழாவில், பொள்ளாச்சி சாா்ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, தோட்டக்கலைத் துறை இனண இயக்குநா் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா, கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகன்பாபு, ராஜேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.