மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடபருத்தியூரைச் சோ்ந்தவா் கவுண்டப்பன். இவரது மகன் நாட்டுத்துரை (34). இவா் இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெளியே சென்றுள்ளாா். அப்போது, ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்டுத்துரை சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன.
இதில், கல்லீரல் கோவை -அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், 2 கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
நாட்டுத்துரையின் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.