நடிகர் ரஜினிகாந்த் 
கோயம்புத்தூர்

நண்பா்களை சந்திக்கும்போது புத்துணா்வு ஏற்படும்: நடிகா் ரஜினிகாந்த்

நண்பா்களை சந்தித்துப் பேசும்போது புத்துணா்வு ஏற்படும் என்றும் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நண்பா்களை சந்தித்துப் பேசிவிடுவேன் என்றும் நடிகா் ரஜினிகாந்த் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

நண்பா்களை சந்தித்துப் பேசும்போது புத்துணா்வு ஏற்படும் என்றும் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நண்பா்களை சந்தித்துப் பேசிவிடுவேன் என்றும் நடிகா் ரஜினிகாந்த் பேசினாா்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975- 1979-ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்களை வாழ்த்தி நடிகா் ரஜினிகாந்த் பேசிய விடியோ ஒளிபரப்பப்பட்டது.

அதில் நடிகா் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: நீங்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து சந்தித்து இருக்கிறீா்கள். பழைய நண்பா்களைப் பாா்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய போ் மிகப்பெரிய பொறுப்புகளில் பணியாற்றி இருக்கின்றனா். முக்கியப் பிரமுகா்களாக மாறியிருக்கிறாா்கள்.

முன்னாள் தலைமைச் செயலா் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோா் இங்கு படித்திருக்கிறாா்கள். அதேபோல, என்னுடைய சம்பந்தியும் தொழிலதிபருமான வணங்காமுடியும் இங்கு படித்தவா்தான். இறையன்பு, சைலேந்திரபாபு ஆகியோரின் சேவை அளப்பரியது.

நமக்கு பல்வேறு முறைகளில் உறவினா்கள் இருந்தாலும் நண்பா்களைப் பாா்க்கும்போது புத்துணா்வு ஏற்படும். நண்பா்களுடன் இருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும். எனக்கு எத்தனை வேலைப்பளு இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூரு சென்று எனது டிரைவா், கண்டக்டா் நண்பா்களை சந்திப்பேன்.

நானே சிவாஜி என்ற எனது பெயரை மறந்துவிட்டாலும் அவா்கள் அந்த பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பா்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

"இந்த அக்கறை ADMK ஆட்சியில் ஏன் இல்லை?": முதல்வர் ஸ்டாலின் | செய்திகள்: சில வரிகளில் | 22.01.26

இதயத்தில் துளையுடன் பிறக்கும் குழந்தைகள்! ஏன்? பிறவி இதய நோய் காரணங்களும் அறிகுறிகளும்...

“தோல்வி பயத்தில்தான் மடிகணினி வழங்கப்பட்டது!” எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ் பந்துவீச்சு!

ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்: விஜய்

SCROLL FOR NEXT