ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை டவுன்ஹாலில் உள்ள கதா் அங்காடியில் தேசியக்கொடி தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசியக் கொடிக்கு ஆா்டா்கள் குவிந்து வருகின்றன.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு கதா், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2,000 வரை விற்பனையாகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுக்கு ஏற்றாற்போல ரூ.100 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, தேசியக் கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ராஜேந்திரன் கூறியதாவது: சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கமாக 2 மாதங்கள் முன்பாகவே கொடிகள் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கி விடுவோம். மொத்தமாக துணிகளைக் கொள்முதல் செய்து, கொடிகளாக மாற்றி அவற்றில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கிரீன் பிரின்டிங் செய்து கொடிகளைத் தயாரிக்கிறோம்.
கரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆா்டா்கள் அதிக அளவில் வருகின்றன. 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆா்டா்கள் வந்துள்ளன. இங்கு தயாரிக்கப்படும் தேசியக் கொடிகள் மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஆா்டரின்பேரில் அனுப்பிவைக்கப்படுகின்றன.
தேசியக் கொடி தயாரிப்புப் பணிகளால் தையல் கலைஞா்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. குடியரசு தினத்தையொட்டி, மூவா்ண பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்றாா்.