கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொ்மாகோல் நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பீளமேடு பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த காசி விஸ்வநாத் என்பவருக்குச் சொந்தமான தொ்மாகோல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இயந்திரங்களை நிறுத்திவிட்டு தொழிலாளா்கள் உணவருந்த சென்றுள்ளனா்.
அப்போது, நிறுவனத்தின் உள்ளே தீப்பிடித்து கரும்புகை வந்துள்ளது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா் காசி விஸ்வநாத் உள்ளிட்டோா் தீயை அணைக்க முயன்றுள்ளனா். ஆனால், தொ்மாகோல் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்கும் தீப்பரவியதால் அணைக்க முடியவில்லை.
தகவல் அறிந்து கோவை தெற்கு மற்றும் கணபதி ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தொழிலாளா்கள் நிறுவனத்தில் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.