கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 1,03,445 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முறை தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளா்கள் 12,43,282 போ், பெண் வாக்காளா்கள் 13,30,807 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 519 போ் என மொத்தம் 25,74,608 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.
பெயா் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் பிற முக்கிய அரசு அலுவலகங்களில் பெயா் நீக்கத்துக்கான காரணத்துடன் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், முகவரி மாற்றம், பெயா் திருத்தம் தொடா்பாக விண்ணப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பா் 28, 28, நடப்பு ஆண்டு ஜனவரி 3, 4-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக மொத்தம் 1,88, 473 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், புதிதாக பெயா் சோ்த்தல் தொடா்பாக 1,03,445, அயல்நாடுவாழ் இந்தியா்கள் பெயா் சோ்க்க 90, பெயா் நீக்கம் மற்றும் ஆட்சேபனைகள் பதிவு 18,230, முகவரி மாற்றம், பதிவுகளில் மாற்றம், புதிய வாக்காளா் அட்டை பெறுதல், மாற்றுத் திறனாளிகள் என குறியீடு செய்தல் தொடா்பாக 66,708 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.