மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை 36,564 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் உள்ள 365 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19 ஆயிரத்து 344 மாணவா்கள், 16 ஆயிரத்து 368 மாணவிகள், தனித்தோ்வா்கள் 852 போ் என மொத்தம் 36,564 போ் எழுதுகின்றனா்.
இந்தத் தோ்வுக்காக 7 மையங்களில் 14 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா்கள்கள் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வுக்காக 130 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 130 துறை அலுவலா்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளா்கள், 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.