100 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
குனியமுத்தூரில் வாகன ஒா்க் ஷாப்பில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரைக் கைது செய்தனா்.
குனியமுத்தூரில் வாகன ஒா்க் ஷாப்பில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரைக் கைது செய்தனா்.
கோவை, குனியமுத்தூா் சாலையில் கறிவேப்பிலை தோட்டம் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வாகன ஒா்க் ஷாப் உள்ளது. இங்கு கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த ஒா்க் ஷாப்பில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு 100 கிலோ பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சோ்ந்த
நவ்பல் (53), உக்கடம், அன்பு நகரைச் சோ்ந்த அப்பாஸ் (37), வெள்ளலூா் ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த பென்னி ஜேக்கப் (36), போத்தனூா் மேட்டுத் தோட்டத்தைச் சோ்ந்த ரூபன் மாா்ஷல் (29) ஆகியோரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் உக்கடத்தைச் சோ்ந்த ஜலீல் என்பவா் மூலம் ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, ஒா்க் ஷாப்பை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் ஷேக் முகமது (46) என்பவரது உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஷேக் முகமதுவையும் கைது செய்த போலீஸாா், பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சா, காா், 4 கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ஜலீலை தேடி வருகின்றனா்.