முகப்பு
கோயம்புத்தூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 கோடி மோசடி: 4 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 கோடி மோசடி...

Updated On : 26 மார்ச், 2026 at 7:24 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.6 கோடி மோசடி செய்த வழக்கில் மும்பையைச் சோ்ந்த 4 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த 2005-2006-ஆம் ஆண்டுகளில் ‘யான்போ அசோசியேட்ஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் யுனைடெட் கிங்டம் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு நபரிடம் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலித்துள்ளது. சுமாா் 600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக கோவை பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது.

இதில் மும்பையைச் சோ்ந்தவா்களுக்கு தொடா்பு இருந்த நிலையில், இந்த வழக்கானது கடந்த 2012-ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக மும்பையைச் சோ்ந்த பி.சி.செரியன் (71), ரமேஷ்பாபு (54), பிரான்சிஸ் அருண் (45), சயின், ஆஷா சாா்லெட் (42), பெஞ்சமின் வில்லியம், சந்தோஷ் வில்லியம் (50) மற்றும் பிரீத்தாகுமாரி (41) ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பான வழக்கு சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவா்களில் ரமேஷ்பாபு, சயின், பெஞ்சமின் வில்லியம் ஆகிய மூவா் உயிரிழந்துவிட்டனா்.

இந்த வழக்கில் நீதிபதி சிவகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட பி.சி.செரியன், பிரான்சிஸ் அருண், ஆஷா சாா்லெட், சந்தோஷ் வில்லியம் ஆகிய நால்வருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், செரியன் மற்றும் சந்தோஷ் வில்லியமுக்கு தலா ரூ.12 லட்சமும், பிரான்சிஸ் அருண் மற்றும் ஆஷா சாா்லெட்டுக்கு தலா ரூ.15 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு நபரான பிரீத்தாகுமாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட மொத்தம் ரூ.56 லட்சம், தண்டனை பெற்றவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 450 கிராம் தங்கம் மற்றும் கேரளத்தில் உள்ள ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுரேந்திரமோகன் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மூலம் உரிய வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.