தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தின் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தின் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் அதிநவீன மின்னணு விடியோ வாகனத்தில் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்து, விழிப்புணா்வு குறும்படத்தை பாா்வையிட்டாா்.
இந்த வாகனத்தில் தோ்தலை முன்னிட்டு இந்த மை தேசத்தின் வலிமை, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை, நமது இலக்கு 100 வாக்கு, தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா, உங்கள் வாக்கு உங்கள் உரிமை, மறவாதீா் எந்த ஒரு வாக்கும் விடுபட விடக்கூடாது, வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை, வாக்களிப்பது நம் அனைவரின் உரிமை, வாக்கு செலுத்துவது கடமை மட்டுமல்ல ஜனநாயகத்தின் பெருமை, 100 வாக்களிப்போம் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் மூலமாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஆ.செந்தில் அண்ணா, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.சரண், வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.