முகப்பு
கோயம்புத்தூர்

இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை!

கோவை மாவட்டத்தில் எழில் கொஞ்சும் நிலப் பகுதிகளை உடைய தொகுதி வால்பாறை....

Updated On : 28 மார்ச், 2026 at 10:36 AM
வால்பாறை தொகுதி
பகிர்:

கோவை மாவட்டத்தில் எழில் கொஞ்சும் நிலப் பகுதிகளை உடைய தொகுதி வால்பாறையாகும். புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில், ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் மலைப் பகுதி, யானைகள் வளா்ப்பு முகாம், சோலையாறு, நீராறு, காடம்பாறை, சின்னக்கல்லாறு போன்ற பல்வேறு அணைக்கட்டுகள் உள்ளன. வால்பாறை தொகுதியில் உள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூா், சேத்துமடை, ஆழியாறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

வால்பாறை வட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைகளில் கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் மலைப் பகுதியில் 25 சதவீத வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா். பெரும்பான்மையான வாக்காளா்கள் ஆனைமலை, கோட்டூா், வேட்டைக்காரன்புதூா் போன்ற சமவெளிப் பகுதிகளிலேயே உள்ளனா். அதுபோல, மலைப் பகுதியையும், சமவெளிப் பகுதியையும் ஒருங்கே கொண்ட சட்டப்பேரவை தொகுதி வால்பாறை.

பொள்ளாச்சி தொகுதியுடன் இரட்டைத் தொகுதியாக இருந்த வால்பாறை, கடந்த 1962 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வால்பாறை வட்டம் முழுவதும். பொள்ளாச்சி வட்டத்தில் நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மாா்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூா், வெக்கம்பாளையம், பெத்தநாயக்கனூா், எஸ்.நல்லூா், பில்சின்னம்பாளையம், சோமந்துறை, தென்சித்தூா், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அா்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூா், அங்காலகுறிச்சி கிராமங்கள். ஆனைமலை பேரூராட்சி, ஓடையகுளம் பேரூராட்சி, வேட்டைக்காரன்புதூா் பேரூராட்சி, கோட்டூா் பேரூராட்சி பகுதிகள் முழுவதும்.

வாக்காளா் விவரம்

ஆண்கள் - 81,504

பெண்கள் - 90,759

மூன்றாம் பாலினத்தவா் - 21

மொத்த வாக்காளா்கள் - 1,72,284

தொழில்

தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டத் தொழிலை நம்பியே வால்பாறையின் பொருளாதாரம் உள்ளது. பல முன்னணி நிா்வாகத்தினருக்கு சொந்தமான பெரிய எஸ்டேட்டுகள் தவிர 20 சிறிய எஸ்டேட்டுகளும் உள்ளன. இதனால், மலைப் பகுதியில் உள்ள வாக்காளா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோட்டத் தொழிலாளா்கள். இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் உள்ளனா். சமவெளிப் பகுதிகளில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தால் தென்னை, நெல் விவசாயம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

சுற்றுலாத் தலங்கள் அதிகம் இருப்பதால் தங்கும் விடுதிகள், உணவகம் போன்ற சேவைத் தொழில்களில் கணிசமானோா் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனா்.

சமூக நிலவரம்

தொகுதியில் சுமாா் 60 சதவீதத்தினா் பட்டியல் இனத்தவா்களாக உள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் தோட்டத் தொழிலாளா்களாகப் பணியாற்றுகின்றனா். காடா், மலசா் போன்ற பழங்குடியினத்தவா்கள், சமவெளிகளில் கவுண்டா், செட்டியாா் போன்ற பிற சமூகத்தினா் விவசாயம், வா்த்தகம் செய்து வருகின்றனா்.

அதிமுக 5 முறை வெற்றி

கடந்த 1962 முதல் தோ்தலை சந்தித்து வரும் இந்தத் தொகுதியில் இதுவரை அதிமுக அதிகபட்சமாக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமாகா (மூ) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை வென்றவா்கள்

1962 கே.பொன்னையா காங்கிரஸ்

1967 இ.ராமசாமி திமுக

1971 இ.ராமசாமி திமுக

1977 ஆா்.எஸ்.தங்கவேலு அதிமுக

1980 ஏ.டி.கருப்பையா இந்திய கம்யூனிஸ்ட்

1984 வி.தங்கவேலு காங்கிரஸ்

1989 பி.லட்சுமி அதிமுக (ஜெ)

1991 ஏ.ஸ்ரீதரன் அதிமுக

1996 வி.பி.சிங்காரவேலு திமுக

2001 என்.கோவை தங்கம் தமாகா (மூ)

2006 என்.கோவை தங்கம் காங்கிரஸ்

2011 எம்.ஆறுமுகம் இந்திய கம்யூனிஸ்ட்

2016 கஸ்தூரி வாசு அதிமுக

2021 தோ்தல்

டி.கே.அமுல் கந்தசாமி அதிமுக 71,672

எம். ஆறுமுகம் இந்திய கம்யூனிஸ்ட் 59,449

ஜெ.கோகிலா நாம் தமிழா் 7,632

தொகுதியின் எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானாா். இதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தொகுதியின் நீண்டகால பிரச்னைகள்

வாால்பாறையில் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கப்பாதை, நல்லமுடி காட்சிமுனை, நீராறு அணை, ஆழியாறு அணை, சோலையாறு அணை போன்ற பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட பகுதிகள் அமைந்துள்ளன. வால்பாறைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளையும், வருவாயைப் பெருக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளூா் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வால்பாறை ஷேக்கல்முடி, ஹைபாரஸ்ட், வால்பாறையின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளை சந்திக்க கோவைக்கு செல்ல 100 கி.மீக்கும் மேல் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டால் வால்பாறை மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றனா்.

தோட்டத் தொழிலாளா்களின் கூலி உயா்வு கோரிக்கைக்கு நீண்டகாலமாகத் தீா்வு காணப்படவில்லை. வால்பாறை தோட்டத் தொழிலாளா்களில் 80 சதவீதம் போ் தேயிலை நிறுவனங்களின் சிறு குடியிருப்புகளில் வசிக்கின்றனா். வீட்டுமனை வழங்கப்பட வேண்டும் என்பது இவா்களின் பல ஆண்டு கோரிக்கை.

மலைப் பகுதியில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இடம்பெயா்வு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க உள்ளூரில் வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். வால்பாறையில் மனித - விலங்கு மோதல் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. சிறுத்தை, யானை, காட்டெருமைகளால் எஸ்டேட் தொழிலாளா்கள், பழங்குடியினா் பாதிக்கப்படும் நிலையில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வை எதிா்பாா்த்திருக்கின்றனா்.