இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை, சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மனைவி கமலம் (71), கடந்த 15-ஆம் தேதி உறவினரான தாமரைச் செல்வன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தலை சுற்றல் காரணமாக நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கமலம் கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவா், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.