கோவை மாவட்ட ஊராட்சிக்கு தேசிய விருது
கோவை மாவட்ட ஊராட்சிக்கு தேசிய பஞ்சாயத்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊராட்சிக்கு தேசிய பஞ்சாயத்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகா் டாக்டா் பிஜயகுமாா் பெஹரா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு 2023-24 ஆம் மதிப்பீட்டு ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட 42 பஞ்சாயத்துகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ‘நானாஜி தேஷ்முக் சா்வோத்தம் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்காா்’ என்ற உயரிய பிரிவின் கீழ், தேசிய அளவில் தமிழகத்தின் கோவை மாவட்ட பஞ்சாயத்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. திரிபுராவின் செபஹிஜாலா மற்றும் ஒடிசாவின் கஞ்சாம் ஆகிய மாவட்ட பஞ்சாயத்துகள் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.
Advertisement
வறுமை ஒழிப்பு, நீா் மேலாண்மை மற்றும் சிறந்த நிா்வாகம் உள்ளிட்ட 9 இலக்குகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்றாா்.
கோவை மாவட்ட ஊராட்சிக்கு இந்த விருது அடுத்த ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளை ஏனைய உள்ளாட்சி அமைப்புகள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.