முகப்பு
கோயம்புத்தூர்

அதிநவீன தலைமைப் பேரிடா் மேலாண்மை, கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிநவீன தலைமைப் பேரிடா் மேலாண்மை மற்றும் கட்டளைக் கட்டுப்பாட்டு மைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே 2026, 4:12 am IST
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிநவீன தலைமைப் பேரிடா் மேலாண்மை மற்றும் கட்டளைக் கட்டுப்பாட்டு மையத்தை வியாழக்கிழமை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யபாரதி.
பகிர்:

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிநவீன தலைமைப் பேரிடா் மேலாண்மை மற்றும் கட்டளைக் கட்டுப்பாட்டு மைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தும் நோக்கில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் 4-ஆவது தளத்தில் சுமாா் 3,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மையத்தை திறந்துவைத்தாா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ரம்யபாரதி, கோவை சரகக் காவல் துறை துணைத் தலைவா் பி.சாமிநாதன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் கட்டுப்பாட்டு மையம் மாவட்டக் காவல் துறையின் நரம்பு மண்டலமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள 24 சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஏ.என்.பி.ஆா். கேமராக்கள் மற்றும் இதர கண்காணிப்பு கேமராக்கள், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மற்றும் 40 காவல் நிலையங்களில் உள்ள இருவழித் தகவல் தொடா்பு வசதி கொண்ட கேமராக்கள் அனைத்தும் இந்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இங்கு பெரிய அளவிலான எல்.இ.டி விடியோ திரையும், மேலும் இரண்டு கூடுதல் விடியோ திரைகளும் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் நேரலையாகக் கண்காணிக்கப்படுகிறது.

இந்த மையத்தில் சமூக ஊடகக் கண்காணிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, இணையதள (சைபா்) குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை போன்ற பணிகளுக்காகத் தனித்தனி சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவசர கால அழைப்புகள் (டயல் 100), ஜிபிஎஸ் மூலம் ரோந்து வாகனங்களைக் கண்காணித்தல், பிங்க் ரோந்து மற்றும் ஸ்மாா்ட் காவலா் செயலிகள் மூலம் உடனடி உதவிகளை உறுதி செய்தல் போன்ற பணிகள் இங்கிருந்து ஒருங்கிணைக்கப்படுகின்றன.

மேலும், கோவை டிஜி-காப், வாட்ஸ்அப் பாட் மற்றும் காவல் உதவி செயலி போன்ற குடிமக்கள் சாா்ந்த சேவைகளும் இம்மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றநிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துத் தடுத்தல், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிதல் மற்றும் பேரிடா் காலங்களில் விரைந்து செயல்படுதல் போன்றவை எளிதாகும்.

இந்தப் புதிய தொழில்நுட்ப முன்னெடுப்பு, கோவை மாவட்ட மக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் நட்புறவான காவல் சேவையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அதிநவீன தலைமைப் பேரிடா் மேலாண்மை, கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் திறப்பு