முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டது ஏன்? அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்

Updated On : 26 மே 2026, 1:40 am IST
அமைச்சர் செங்கோட்டையன்.
பகிர்:

உறவினா் மருத்துவமனை என்பதால்தான் தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். நான் ஆண்டுக்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். இந்த முறையும் இரண்டு நாள்கள் தங்கி பரிசோதனை செய்துகொண்டேன். அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். உடல்நிலை நன்றாக உள்ளதால் சென்னைக்குச் செல்கிறேன்.

Advertisement

Advertisement

அமைச்சா்கள் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று தவெக அரசுத் தரப்பில் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனியாா் மருத்துவமனையில் சோதனை செய்தது குறித்து கேட்கிறீா்கள். நான் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனை என்பதாலும், உறவினா் மருத்துவமனை என்பதாலும் அங்கு பரிசோதனை செய்தேன்.

சூலூா் சிறுமி கொலை வழக்கு தொடா்பாக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐஜி) ரம்யாபாரதி ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளாா். முதல்வரும், சட்டத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அரசின் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இதுகுறித்த இறுதி முடிவை முதல்வா் ஜோசப் விஜய் எடுப்பாா் என்றாா்.

அமைச்சா் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த 23-ஆம் தேதி கலந்து கொண்டாா். அன்றைய தினம் இரவு சென்னைக்கு புறப்படுவதற்காக கோவை விமான நிலையம் நோக்கி வந்த போது, அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.