பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் உயர்வு: நவம்பர் 10-இல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற 15 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற 15 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி கூறியதாவது:
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு முதல் நகல் பெற ரூ. 17-ம், அதற்கு மேல் ஒவ்வோர் நகல் பெறுவதற்கும் ரூ. 5 வீதம் மட்டுமே கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதற்கான கட்டண உயர்வை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி முதல் நகல் பெற ரூ. 200- ம், அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு நகலுக்கும் ரூ. 200 வீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இந்த திடீர் கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு கிட்டத்தட்ட 15 மடங்கு கூடுதலாகும். எனவே, தமிழக அரசு இக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் வரும் நவம்பர் 10-ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.