மான் இறைச்சி சமைத்த தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
அந்தியூர் அருகே இறந்து கிடந்த மானின் இறைச்சியை சமைத்த மாடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் அருகே இறந்து கிடந்த மானின் இறைச்சியை சமைத்த மாடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (46). மாடு மேய்க்கும் தொழிலாளி. இந்நிலையில், இவர் தனது வீட்டில் மான் இறைச்சி சமைப்பதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தியூர் வனத் துறையினர் அவரது வீட்டில் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பெருமாள் ஒரு கிலோ மான் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தார். மேலும், 4 கிலோ இறைச்சியை உலர வைத்திருந்தார்.
இதையடுத்து, இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வனப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது செந்நாய்கள் துரத்தியதில் உயிரிழந்த மானை எடுத்து வந்து வீட்டில் சமைத்தது தெரிந்தது. இதையடுத்து, பெருமாளைக் கைது செய்த வனத் துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.