பண்ணாரியில் நாம் தமிழர் கட்சியினர் 200 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கர்நாடக எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு பண்ணாரி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கர்நாடக எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு பண்ணாரி சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து இரு மாநில எல்லையான தாளவாடி வழியாக கர்நாடகத்தை முற்றுகையிடுவதற்காக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதன்படி, சத்தியமங்கலத்தில் இருந்து வாகனப் பேரணியாகப் புறப்பட்ட அக் கட்சியினர் புதுவள்ளி வழியாக பண்ணாரி சென்றனர் .இப் போராட்டத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கிருந்து கர்நாடகத்துக்கு நுழைய முயன்றவர்களை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறிச் சென்ற 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டம் எதிரொலியாக இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.