சாவடிப்பாளையம்புதூர் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
மொடக்குறிச்சியை அடுத்த சாவடிப்பாளையம் பகுதியில் எஸ்.கே.எம். கோழித் தீவன ஆலையில் இருந்து ரயிலில் வரும் தீவனங்களை இறக்க ரயில்வே
மொடக்குறிச்சியை அடுத்த சாவடிப்பாளையம் பகுதியில் எஸ்.கே.எம். கோழித் தீவன ஆலையில் இருந்து ரயிலில் வரும் தீவனங்களை இறக்க ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களைப் புறக்கணித்து, வடமாநிலத் தொழிலாளர்களை நியமித்து தீவனங்களை இறக்க முடிவு செய்ததால் ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். மாடு கோழித் தீவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தீவனங்கள் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், தீவனம் தயாரிக்கத் தேவையான மக்காச்சோளம், சோயா போன்ற மூலப் பொருள்கள் நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்ததும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கப்பட்டு, லாரிகள் மூலம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள எஸ்.கே.எம். நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கப்படும்.
இதனால் ஏற்படும் காலவிரயம், பொருள் செலவுகளை சரிகட்ட எஸ்.கே.எம். தீவனத் தயாரிப்பு நிர்வாகம் சார்பில் சாவடிப்பாளையம்புதூர் ரயில் நிலையத்தில் தனிப் பாதை போடப்பட்டு புதிய செட் அமைக்கப்பட்டது. இதனால், தங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் சுமார் 2,600 டன் எடையுள்ள சோயா மூட்டைகள் புதன்கிழமை மதியம் சாவடிப்பாளையம்புதூர் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
தீவனத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு ரயிலில் இருந்து சோயா மூட்டைகளை இறக்க முடிவு செய்து ரயில் நிலையம் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஈரோடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சுமை தூக்கும் பணியில் எங்களை விடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களை மூட்டைகளை இறக்க அனுமதிக்க மாட்டோம் என்று லாரிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஈரோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளர், ரயில்வே போலீஸார், மொடக்குறிச்சி வட்டாட்சியர் ஜெயகுமார் ஆகியோர் விரைந்து வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சிஐடியூ சுமை தூக்குவோர் சங்கத் தலைவர் டி.தங்கவேல் தலைமையில், தொழிலாளர்கள் தங்களது பணியை தாங்கள்தான் செய்வோம். கூலி குறித்து நாங்கள் எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. வேலை நேரம் குறித்தும் நிர்வாகம் சொல்லும் நேரத்துக்கு வந்து இறக்கவும் தயாராகவும் உள்ளோம். ஆனால், வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து மூட்டைகளை இறக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து, எஸ்.கே.எம். நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் கூறுகையில், நாங்கள் எங்களது மூட்டைகளை இறக்க உரிய அனுமதி பெற்றிருக்கிறோம். எங்களுக்கு உங்களது உதவி தேவையில்லை. நாங்கள் உங்களை அழைக்கவும் இல்லை. நாங்கள் உங்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து, ரயிலில் இருந்து சோயா மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்ற விடாமல் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடரும் பட்சத்தில் திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட சுமை தூக்கும் சங்கத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாவடிப்பாளையம்புதூர் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.