பெருந்துறை அருகே அரசு நகரப் பேருந்து சிறைபிடிப்பு
பெருந்துறை அருகே அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பெருந்துறை அருகே அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பெருந்துறையிலிருந்து ஈரோட்டுக்கு 8-ஈ என்ற நகரப் பேருந்து கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், நசியனூர் வழியாகச் சென்று வருகிறது. இந்நிலையில், ஈரோட்டிலிருந்து பெருந்துறைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து சென்றுள்ளது.
அந்தப் பேருந்தில் காஞ்சிக்கோவில், கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பார்வதி (60) என்பவர் ஏறி, கருமாண்டிசெல்லிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அவர் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பார்வதி நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவர் காயமின்றி உயிர்தப்பினார்.
இதேபோல, பிப்ரவரி 15-ஆம் தேதி காலை பெருந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து பவானிக்கு அரசு நகரப் பேருந்து பி-2 சென்றுள்ளது. பெருந்துறை, அண்ணாசிலை பேருந்து நிறுத்தத்தில் கருமாண்டிசெல்லிபாளையம், அங்கப்பன் வீதியைச் சேர்ந்த குப்புசாமி (70) ஏறியுள்ளார். கருமாண்டிசெல்லிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெருந்துறையிலிருந்து ஈரோட்டுக்கு வந்த 8-ஈ என்ற நகரப் பேருந்தை, கருமாண்டிசெல்லிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் நிறுத்தி சிறைபிடித்து புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம், போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்தை விடுவித்தனர்.