பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கொமதேக கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரúôல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகி வருகிறது. தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை பைசா கணக்கில் அதிகரித்து தற்போது புதிய உச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது கடும் கண்டனத்துக்குரியது. கடந்த 19 நாள்களாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை கர்நாடக மாநிலத் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உயர்த்தப்படுகிறது. அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் நிலையாக இருக்குமா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இதையெல்லாம் பார்க்கும்போது மத்திய அரசின் விருப்பதுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது தெளிவாகிறது. பெட்ரோல் விலை அதிகரிப்பால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படுகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் தொலை தூரத்தில் இருந்து சரக்கு ஏற்றி வரும் லாரிகளுக்கு வாடகை கட்டுபடியாகாமல் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரியைக் குறைத்து விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட வேண்டிய நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.