முகப்பு
ஈரோடு

மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் வெளிப்படைத் தன்மை தேவை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு மாநகராட்சியின் பட்ஜெட் குறித்த வெளிப்படைத் தன்மை தேவை என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On : 22 மே, 2018 at 12:56 AM
பகிர்:

ஈரோடு மாநகராட்சியின் பட்ஜெட் குறித்த வெளிப்படைத் தன்மை தேவை என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மாநகராட்சியின் வரவு-செலவு திட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர். கடந்த காலங்களின் நிதிநிலை குறித்த விவரங்கள் புத்தகமாக வெளியிடப்படுவதை மக்களும், மாமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியினரும் பார்த்து வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சியின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான விவரங்கள் இதுவரை பொதுமக்களுக்குத் தெரியாத நிலை உள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற மாநகராட்சிகளில் நிதி நிலை அறிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டு, ஊடகங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் இதுவரை நிதிநிலை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படாத நிலையே உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாநகராட்சியில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இறுதியில் வரவு - செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சியில் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே குடிநீர், ஸ்மார்ட் சிட்டி, ஸ்வட்ச் பாரத், அம்ரூத் போன்ற திட்டங்கள் குறித்த விவரங்களை அனைத்துத் தரப்பினரும் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இது தவிர, புதிதாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாநகராட்சியில் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுவது குறித்து வெளிப்படைத் தன்மை இல்லாததால் இந்நிலை உள்ளது. மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட வேண்டிய நிதி நிலை அறிக்கை தற்போது வரை வெளியிடப்படாமல் இருப்பது வேதனைக்குரியது என்றனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் விசாரித்தபோது, மாநகராட்சியின் இணையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாகவே நிதிநிலை குறித்த விவரத்தை அறிவிக்க முடியவில்லை. சீரானவுடன் விரைவில் நிதிநிலை குறித்த விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.