சதுர்த்தி விழாவுக்காக முழுவீச்சில் தயாராகும் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஈரோடு அருகே 3 அடி முதல் 11 அடி உயரத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஈரோடு அருகே 3 அடி முதல் 11 அடி உயரத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது, ஊர்வலம் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மாவட்டம் முழுதும் நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
ஈரோடு அருகே வெட்டுக்காட்டுவலசு, கணபதி நகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி மட்டுமே நிலுவையில் உள்ளது.
விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடி முதல் 11 அடி வரை உயரம் வரையிலான விநாயகர் உருவச் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் சிலைகள் மைதா மாவு, பேப்பர் மாவு ஆகிய கலவைகள் மூலம் தயாராகின்றன. சிம்ம வாகன விநாயகர், மான் வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், முருகனை மடியில் வைத்திருக்கும் விநாயகர், சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகர் உள்பட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் ஓரிரு நாளில் நிறைவடைந்து விடும் என்றனர்.