சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டம் கொடுமுடியில் துவக்கம்: எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தொடங்கிவைத்தார்
கொடுமுடி வேளாண்மை அலுவலகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சிறு, குறு, வறுமைக்கோட்டுக்கு
கொடுமுடி வேளாண்மை அலுவலகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சிறு, குறு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கொடுமுடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் எஸ்.மோகனசுந்தரம், மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், வெள்ளோட்டாம் பரப்பு முன்னாள் பேரூராட்சித் தலைவரும் இந்திய உணவுக் கழக உறுப்பினருமான எஸ்.டி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
வேளாண்மை அலுவலர் சசிகலா, வேளாண்மைத் துணை அலுவலர் ராஜாமணி, வேளாண்மை உதவி அலுவலர் க.சரவணன், தோட்டக் கலை உதவி இயக்குநர் ஜெகநாதன், வேளாண்மை தொழில்நுட்ப அலுவலர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கொடுமுடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் எஸ்.மோகனசுந்தரம் பேசியதாவது:
கொடுமுடி ஒன்றியப் பகுதிகளில் உள்ள சிறு, குறு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து 4,470 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் ஒவ்வொருவருக்கும் முதல் தவணையாக தலா ரூ.2000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 2ஆவது மற்றும் 3ஆவது தவணைத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கொடுமுடி அதிமுக ஒன்றியச் செயலாளரும், மாநில விதை நேர்த்திக் கழக உறுப்பினருமான புதூர் கலைமணி, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, விவசாயிகள் கலந்துகொண்டனர்.