ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நகரான ஈரோட்டில் இருந்து தொழில், வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் ஏராளமானவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். சென்னைக்கு செல்பவர்களில் பெரும்பாலும் ரயில் பயணத்தைதான் அதிகம் விரும்புகின்றனர்.
இதனால், ரயில்களில் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பகல் நேரங்களில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற இடங்களுக்குச் செல்பவர்களுக்கும் போதுமான ரயில் சேவை இல்லாமல் தவிக்கின்றனர்.
ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்கின்றனர்.
இப்போது, பகல் நேரத்தில் சென்னைக்கு தினமும் சராசரியாக 2 ரயில்கள் இருந்தாலும் அவை அனைத்தும் கேரள மாநிலத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றன. இந்த ரயில்களால் ஈரோடு மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
இதனால் காலை 5 மணிக்கு புறப்படும் வகையில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு அதிவிரைவு ரயில் அல்லது முன்பதிவு இல்லாத பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.என்.பாட்ஷா கூறியதாவது:
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயிலும் இரவு 9 மணிக்கு தான் புறப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய குறைந்தது 10 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கு புறப்படும் வகையில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஜனசதாப்தி ரயில் அல்லது முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், ரயில்வே நிர்வாகம், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூட ஆய்வு செய்ய முன்வரவில்லை. கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுவதை போல், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ஜனசதாப்தி அல்லது விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.