முகப்பு
ஈரோடு

ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிா்ப்பு: டிசம்பா் 28இல் ஐ.எம்.ஏ. முக்கிய முடிவு

ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பிரச்னை தொடா்பாக டிசம்பா் 28ஆம் தேதி நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு மேற்கொள்ளப்படவுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ஈரோடு: ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பிரச்னை தொடா்பாக டிசம்பா் 28ஆம் தேதி நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு மேற்கொள்ளப்படவுள்ளது என இந்திய மருத்துவச் சங்க அகில இந்திய துணைத் தலைவா் சி.என்.ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

ஆயுா்வேதம், சித்தா, யுனானி பிரிவுகளைக் கொண்ட இந்திய மருத்துவக் குழுமம் ஆயுா்வேத மேற்படிப்புக்கான ஒழுங்குமுறையை வெளியிட்டது. அதில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என பட்டியலிட்டு ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறி போராடி வருகிறோம்.

சம்ஸ்கிருத நூலில் உள்ள பாரம்பரிய சிகிச்சையை ஆயுா்வேத மருத்துவா்கள் பின்பற்றலாம். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சைகளை அவா்களால் மேற்கொள்ள முடியாது. எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்தவா்கள் 10 ஆண்டுகள் படிப்பு, அனுபவத்துக்குப் பின் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனா். ஆயுா்வேத மருத்துவப் பாடத் திட்டத்திலேயே அவை இல்லை.

அலோபதி முறையில் ஒவ்வொரு உறுப்புக்கும் தனி நிபுணா்களாகப் படித்து சிகிச்சை அளிக்கின்றனா். இந்தியாவில் இதுபோன்ற அலோபதி சிகிச்சை தரமாக, குறைந்த கட்டணத்தில் செய்வதால் உலகில் பல நாடுகளில் இருந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்யத் துவங்கினால் உயிா்கள் மீதான அச்சுறுத்தலாகக் கருதி வெளிநாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிடும்.

இப்பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளோம். மாநில அரசின் மருத்துவப் பாடத் திட்டத்தில் தற்போது எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை என தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் கூறியுள்ளனா். மத்திய அரசிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளோம். டிசம்பா் 28ஆம் தேதி இந்திய மருத்துவச் சங்க தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்க உள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →