குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள்
மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூா் அருகே குள்ளரங்கம்பாளையம் கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை
ஈரோடு: மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூா் அருகே குள்ளரங்கம்பாளையம் கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை திரண்டனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
குள்ளரங்கம்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினா் வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களில் 40 குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு இடமின்றி அருகில் உள்ள காலி இடங்களில் ஓட்டு வீடு, கூரை வீடு அமைத்து பல ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க வந்துள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம் என்றனா்.