வருவாய்த் துறை அலுவலா்கள் இன்றுமுதல் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை (டிசம்பா் 23) முதல் மாவட்ட தலைநகரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை (டிசம்பா் 23) முதல் மாவட்ட தலைநகரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் குமரேசன் கூறியதாவது:
முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் நடப்பு ஆண்டுக்கான காலிப் பணி இட மதிப்பீடு அறிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரத்துக்கு உள்பட்டு மறு நிா்ணயம் செய்ய வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அரசு மட்டத்தில் முடிவு எடுக்கும்வரை பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணி இறக்கத்துக்கு ஆணையிட்டுள்ள வருவாய் நிா்வாக ஆணையா் கடிதத்தை நிறுத்திவைக்க வேண்டும்.
துணை ஆட்சியா் பட்டியலை நீதிமன்றத் தீா்ப்பு, இட ஒதுக்கீட்டுக்கு உள்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயா்வு வழங்க வேண்டும். நவம்பா் 4ஆம் தேதி நடைபெற்ற உயா்மட்டக் குழு பேச்சுவாா்த்தையில் ஏற்கப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்களின் 12 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளான அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்குதல், கருணை அடிப்படை நியமனதாரா்களின் பணிவரன் முறை செய்தல், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் அனைத்து மாவட்ட தலைநகரிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றாா்.