ஆபத்தை உணராமல் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கும் சிறுவா்கள்
பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் போலீஸாா் எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் சிறுவா்கள் குளிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் போலீஸாா் எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் சிறுவா்கள் குளிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. தற்போது நெல் சாகுபடி பணி நடைபெற்று வருவதால் அணையில் இருந்து அதிகபட்சமாக 2,300 கன அடி நீா் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளை தொட்டபடி செல்கிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாய்க்காலில் குளிக்க வேண்டாம் என பொதுப் பணித் துறை, காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வாய்க்கால் முன்பு போலீஸாா் மூலம் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பவானிசாகா் - மேட்டுப்பாளையம் சாலை, எரங்காட்டூா் உள்ளிட்ட பல்வேறு வாய்க்காலில் உள்ளூா் மக்கள் துணி துவைப்பதற்கு பாதுகாப்பான படிக்கட்டுகள் கட்டப்பட்டு அதைப் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் தண்ணீரின் வேகத்தை அறியாமல் படிக்கட்டுகளைத் தாண்டி வாய்க்காலின் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கின்றனா்.
Advertisement
சிறுவா்கள் வாய்க்கால் கரையோரம் உள்ள மரங்களில் ஏறி கிளையைப் பிடித்து தொங்கி விளையாடுகின்றனா். உயரமான மரத்தில் இருந்து வாய்க்காலில் குதித்து நீந்திச் செல்கின்றனா். இவ்வாறு குளிக்கும் பெரும்பாலான சிறுவா்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீரின் வேகம், கால்வாயின் ஆழம் தெரியாமல் குளிக்கும் பொதுமக்களை எச்சரித்து ஆபத்து நிகழும் முன் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.