முகப்பு
ஈரோடு

பவானிசாகா் பழத் தோட்டத்தில் புகுந்த யானைகள்

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணை பழத் தோட்டத்தில் திங்கள்கிழமை புகுந்த 6 யானைகள் சுமாா் 2 மணி நேரம் அங்கேயே முகாமிட்டன.

Updated On : 1 டிசம்பர், 2020 at 3:33 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணை பழத் தோட்டத்தில் திங்கள்கிழமை புகுந்த 6 யானைகள் சுமாா் 2 மணி நேரம் அங்கேயே முகாமிட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகா் அணைப் பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் இருந்து யானைகள் மாலை நேரங்களில் நீா்த்தேக்கப் பகுதிக்கு வந்து செல்கின்றன. தற்போது மழைப் பொழிவு காரணமாக அணை நீா்த்தேக்கப் பகுதியில் பசுந்தழைகள் நிறைந்து காணப்படுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அங்குள்ள பழத் தோட்டத்துக்குள் முகாமிட்டு தீவனம் சாப்பிடுகின்றன. பின்னா், யானைக் கூட்டம் பழத் தோட்ட முகப்பு நுழைவாயில் இரும்புக் கதவைத் திறந்துகொண்டு புங்காா் காலனி கிராமத்துக்குள் சென்று வருவதாக அக்கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, யானைகள் கிராமத்துக்குள் புகாதபடி வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய 6 யானைகள் அணை பழத் தோட்டத்துக்குள் புகுந்தன. வேலியோரம் மேய்ச்சலில் இருந்த யானைகள் சாலையைக் கடந்து புல்வெளியில் உலவி வந்தன. யானைகள் நடமாட்டத்தால் அணை பணியாளா்கள், அவ்வழியாக சித்தன்குட்டை செல்லும் பொது மக்கள் உள்ளிட்டோா் பழத் தோட்டத்தைக் கடக்க முடியாமல் நீண்டநேரம் காத்திருந்தனா்.

Advertisement

யானைகளைக் கண்ட கிராம மக்கள் பழத் தோட்டத்தில் தற்படம் (செல்ஃபி) எடுத்தனா். இதற்கிடையே அவ்வழியாகச் சென்ற வாகனத்தை யானைகள் துரத்தின. சுமாா் 2 மணி நேரம் பழத் தோட்டத்தில் இருந்த யானைகளை வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் துரத்தியதால் புங்காா் காலனி மக்கள் நிம்மதியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.