அங்கீகரிக்கப்படாத மனைகள் விற்பனை: முதல்வா் நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. கோரிக்கை
பெருந்துறை தொகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்து வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிலா் மீது முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெருந்துறை தொகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்து வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிலா் மீது முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பெருந்துறை தொகுதியில் விஜயமங்கலம், சென்னிமலை, ஈங்கூா் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீட்டுமனைப் பிரிவுகள் அங்கீகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். அரசின் விதிப்படி டிடிசிபி அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அந்த மனைகளை மட்டுமே பத்திரப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கான பூங்காக்கள், விளையாட்டு திடல் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்க முடியும். அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது புதிராக உள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்டவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் மூலம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தற்போது கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் வீடு கட்டுபவா்கள் குடிநீா் வசதி கோரினால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட பொது இடம் இருக்காது. சாலை வசதிகள், பூங்காக்கள் உருவாக்க இடம் இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவாா்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.