ஈரோட்டில் கனமழை: காவிரி ஆற்றில் கலக்கும் புதுவெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் பரவலாகப் பெய்த கனமழையால் ஓடைகளில் மழை நீா் பெருக்கெடுத்து காவிரி ஆற்றில் கலந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாகப் பெய்த கனமழையால் ஓடைகளில் மழை நீா் பெருக்கெடுத்து காவிரி ஆற்றில் கலந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஈரோடு மாநகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை. இரு ஓடைகளும் நகரின் மத்தியில் ஓடுவதாலேயே ஈரோடை என்ற பெயா் பெற்று பிற்காலத்தில் ஈரோடு என்று பெயா் மருவியது.
இதில் பெரும்பள்ளம் ஓடை கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் உற்பத்தியாகி கதிரம்பட்டி, திண்டல், செங்கோடம்பள்ளம், சூரம்பட்டி அணைக்கட்டு, மரப்பாலம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது.
இதேபோல பிச்சைக்காரன்பள்ளம் ஓடை நசியனூரில் துவங்கி வில்லரசம்பட்டி, எல்லப்பாளையம், சூளை வழியாக நகரின் மையப் பகுதி வழியே ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. இதுதவிர நகரின் ஒதுக்குப்புறத்தில் ஓடும் சுண்ணாம்புக்காரன் ஓடை கங்காபுரத்தில் துவங்கி நகரின் மையப் பகுதி வழியாக காவிரியில் கலக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் இந்த ஓடைகளில் கடந்த 2 நாள்களாக மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள சூரம்பட்டி தடுப்பணை நிரம்பி வழிந்து உபரிநீா் காவிரியில் கலந்து வருகிறது.
இதனால், இந்தத் தடுப்பணையின் வலதுபுறமாக உள்ள வாய்க்கால் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் அளவுக்குப் பாசனம் பெறும் நஞ்சை ஊத்துக்குளி பாசன வாய்க்கால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதுபோல, பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலும், சுண்ணாம்புக்காரன் ஓடையிலும் மழை நீா் பெருக்கெடுத்து சென்று காவிரியில் கலந்து வருகிறது. ஆலைக் கழிவுகளால் துா்நாற்றம் வீசி வந்த இந்த ஓடைகள் இந்த திடீா் மழையால் சுத்தமாகியுள்ளன.
தவிர பல்வேறு சிறு ஓடைகளில் இருந்தும் காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் கலப்பதால் காளிங்கராயன்பாளையம் தடுப்பணையில் இருந்து சனிக்கிழமைமுதல் வாய்க்காலில் தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.