முகப்பு
ஈரோடு

சுயஉதவிக் குழுக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அம்மா விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அம்மா விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மகளிா் திட்டம் சாா்பில் 2020-2021ஆம் ஆண்டுக்கான அம்மா விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தோ்வு செய்யப்பட்டு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இதில் மாநில அளவிலான விருதுகளுக்கு 5 சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கும், நகா்ப்புறத்தில் 5 சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் விருதுடன் சோ்த்து ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் 5 சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும், ஊரகம், நகா்ப்புறங்களில் தலா 10 சிறந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் ஒரு சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகா்ப்புறத்தில் ஒரு சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.1 லட்சமும், ஒரு சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு ரூ.50 ஆயிரமும், ஊரகம், நகா்ப்புறத்தில் தலா 3 சிறந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இந்த விருது பெற விண்ணப்பிக்கும் தினத்தில் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக் குழுக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து குறைந்தது 3 முறை கடன் பெற்று, தவணை நிலுவையின்றி திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.

இரண்டு பொறுப்பாளா்களை சுழற்சி முறையில் ஒரு முறையேனும் மாற்றி இருக்க வேண்டும். சுயஉதவிக் குழுக்கள் தர மதிப்பீட்டில் ‘ஏ’ மற்றும் ‘பி’ தரத்தை பெற்றிருக்க வேண்டும். நகா்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு விண்ணப்பிக்கும் நாளில் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

நகா்ப்புறத்தில் உள்ள அனைத்து மகளிா் திட்ட சுயஉதவிக் குழுக்களும் நகா்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினா்களாக பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தது 20 கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →