பட்லூர் வாகீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
பட்லூர் வாகீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைகள் திருடப்பட்டது குறித்தும், சாமி சிலைகள் ஏரிக்கரையில் உள்ள புதரில் வீசப்பட்டது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பவானி அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைகள் திருடப்பட்டது குறித்தும், சாமி சிலைகள் ஏரிக்கரையில் உள்ள புதரில் வீசப்பட்டது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள பட்லூரில் மிகப்பழமை வாய்ந்த வாகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கரோனா பரவல் தடையால் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு தளர்வுகள் அறிவித்துள்ளதால் இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வழிபாடுகள் முடிந்த பின்னர் அர்ச்சகர் கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். மீண்டும் மாலையில் வந்து பார்க்கும்போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைகள் மாயமாகியிருந்தன. மேலும், 25 கிலோ எடையுள்ள உலோகச் சிலையும் காணவில்லை. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கோயிலின் கதவை உடைத்து புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கைகளை திருடிச் செல்வதும், கோயிலுக்குள் இருந்த சாமி சிலையை தூக்கி செல்வதும் தெரியவந்தது.
கோயிலைச் சுற்றியுள்ள ஏரிக்கரை பகுதியில் தேடி பார்க்கையில் உலோகச்சிலை புதருக்குள் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து, கோயில் செயல் அலுவலர் பிரேமா அளித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.