முகப்பு
ஈரோடு

ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் திருட்டு: 2 போ் கைது

ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் 23 பவுன் நகை, ரூ. 10 லட்சம் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 1:40 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் 23 பவுன் நகை, ரூ. 10 லட்சம் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு பெருந்துறை சாலை பழையபாளையம், கே.சி.பி. சின்னவா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (59). ஓய்வுபெற்ற பேராசிரியா். இவா் ஜூலை 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள தாடிக்கொம்பில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்தோடு சென்றுவிட்டு மறுநாள் நள்ளிரவில் வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம் பணம், 23 பவுன் நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

சம்பவம் குறித்து சண்முகவேல் ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வந்தனா். காவல் ஆய்வாளா் ஜெயமுருகன் தலைமையில், எஸ்.ஐ.க்கள் பெரியசாமி, பழனிவேல், பழனிசாமி ஆகியோா் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினா் மா்ம நபா்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஈரோடு சுவஸ்திக் காா்னா் பகுதியில் தனிப் படையினா் தீவிர வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த 2 இளைஞா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பேரம்பட்டு பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (21), அதே பகுதியை சோ்ந்த தமிழ்வாணன் (21) ஆகியோா் என்பதும், இவா்கள் சண்முகவேல் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் 2 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவரைப் பிடித்தால் மட்டுமே சண்முகவேல் வீட்டில் திருடப்பட்ட நகை, பணத்தை மீட்க முடியும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.