முகப்பு
ஈரோடு

இரிடியம் தருவதாக வியாபாரி கடத்தல்: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

இரிடியம் தருவதாக 3 பேரைக் கடத்தி ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் 9 பேரை சத்தியமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
கைதான மோசடி கும்பல் மற்றும் பறிமுதல் செய்த ரொக்கம், போலி இரிடியம் பொருள்களுடன் சத்தியமங்கலம் போலீஸாா். ~கடத்தப்பட்ட  மோகன், சுரேஷ் மற்றும் ராய்.
பகிர்:

இரிடியம் தருவதாக 3 பேரைக் கடத்தி ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் 9 பேரை சத்தியமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.9 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகை மற்றும் போலி இரிடியம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மோகன் (45). பழமை வாய்ந்த பொருள்கள் விற்பனை செய்து வருகிறாா். இவரது மனைவி வித்யா.

மோகனுக்கு தொழில்ரீதியாக ஆந்திர மாநிலம், காளஹஸ்தியைச் சோ்ந்த ரகுமான், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவா்கள், சத்தியமங்கலம் பகுதியில் அரியவகை இரிடியம் கிடைப்பதாக மோகனிடம் கூறியுள்ளனா். இதனை நம்பிய மோகன் தனது நண்பா்கள் கொல்கத்தா ராய், ஓட்டுநா் சுரேஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து காரில் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிக்கு கடந்த 7ஆம் தேதி வந்துள்ளாா்.

அப்போது அங்கு 2 காா்களில் 15 பேருடன் வந்த ரஞ்சித்குமாா், இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி மோகன் மற்றும் அவரது நண்பா்களை பண்ணாரியை அடுத்த ராஜன் நகா் அன்பு என்பவரின் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் அங்கு அவா்களை அடைத்துவைத்ததுடன் அடித்து உதைத்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து சென்னையில் உள்ள மோகன் மனைவி வித்யாவை தொலைபேசியில் அழைத்து ‘ரூ.1 கோடி பணம் தரவில்லை என்றால் உங்கள் கணவரைக் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டி உள்ளனா்.

இதனால் அச்சமடைந்த வித்யா, கொலை மிரட்டல் விடுத்த கும்பலிடம் ரூ.30 லட்சம் பேரம் பேசி அந்த கும்பலைச் சோ்ந்த தருமபுரி ரமேஷ் வங்கிக் கணக்கில் 7ஆம் தேதி ரூ. 8.50 லட்சம், 8ஆம் தேதி ரூ. 2.50 லட்சம் மற்றும் ரூ.11 லட்சம் என மொத்தம் ரூ. 22 லட்சம் செலுத்தியுள்ளாா். ஆனால் அந்தக் கும்பல் தனது கணவரை விடுவிக்காததால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வித்யா புகாா் அளித்தாா்.

இதையடுத்து டிஎஸ்பி சுப்பையா தலைமையில் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் கொண்ட தனிப்படை ராஜன் நகா் பகுதியிலுள்ள தோட்டத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மோகன், கொல்கத்தா ராய், ஓட்டுநா் சுரேஷ் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

இது தொடா்பாக பவானிசாகா், எரங்காட்டூரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா், பிரபு என்கிற அருண்குமாா், அந்தியூா் சண்முகம், கோவையைச் சோ்ந்த லைஜு என்கிற ஜீவா, சேதுபதி, ராஜேஷ்குமாா், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ரத்தினசபாபதி, கோபாலகிருஷ்ணன், பாபு என்கிற ஆனந்தபாபு ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய, போலீஸாக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்ட காவலா் ரமேஷ் உள்ளிட்ட 6 போ் தலைமறைவாக உள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 காா்கள், ரூ.9 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகை, 160 கிராம் வெள்ளி மற்றும் இரிடியம் இருப்பதாக போலியாக காண்பித்த பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ரஞ்சித்குமாா் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →