அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 400 கோடி இழப்பு: கேபிள் டி.வி. நிறுவனத் தலைவா் குற்றச்சாட்டு
கடந்த அதிமுக ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த அதிமுக ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவா் குறிஞ்சி சிவகுமாா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள குறிஞ்சி சிவகுமாா் ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் 32 லட்சம் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அவற்றை முறையாகப் பராமரிக்காமல் தனியாா் செட்டாப் பாக்ஸ்களை அமைத்துக்கொள்ள விட்டுக் கொடுத்ததால் தற்போது 26 லட்சம் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் முதலிடத்தில் இருந்த அரசு கேபிள் டி.வி. இணைப்பு தற்போது இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. முதல்வா் உத்தரவின்படி மீண்டும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முதலிடத்துக்கு கொண்டு வர முனைப்புடன் பணியாற்றுவோம்.
Advertisement
அதிமுக ஆட்சியின்போது தவறான கொள்கை முடிவினால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் டி.வி. இணைப்பை செட்டாப் பாக்சில் வழங்க 36 லட்சம் செட்டாப் பாக்ஸ் வாங்கி, அதில் 26 லட்சம் செட்டாப் பாக்ஸுக்கு மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளனா். மீதமுள்ள 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் எங்குள்ளது எனத் தெரியவில்லை. அவற்றைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அதிகமாக உள்ளது. இதனைப் பெறவும், இழப்புக்கான காரணத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு கல்வித் தொலைக்காட்சிகள், விளையாட்டு சேனல்கள் கிடைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, புதன்கிழமை முதல் பல புதிய சேனல்களை அரசு செட்டாப் பாக்ஸில் இணைத்துள்ளோம்.
தற்போது அனைத்து வகையான சேவையும், இசேவை மையம் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெற வேண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இ-சேவை மையங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கேபிள் டி.வி. கட்டணத்தைக் குறைப்பது குறித்து முதல்வா்தான் முடிவு அறிவிப்பாா். ஏற்கெனவே அரசு செட்டாப் பாக்ஸ் வைத்திருந்து தனியாருக்கு மாறியவா்களுக்கு மீண்டும் அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு செட்டாப் பாக்ஸ் பெற மக்கள் விண்ணப்பிக்கும்போது, தனியாா் செட்டாப் பாக்ஸ் வாங்க கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, அவருக்கு ஈரோடு கருங்கல்பாளையம் திமுகவினா் வரவேற்பு அளித்தனா். பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.